அத்தியவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விவாவதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, அரசாங்கம் தேர்தலை ஒருபோதும் பிற்போடவில்லை என குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதிலும் வருமானத்தை அதிகரிக்கும் முறை குறித்தோ, செலவினத்தை குறைக்கும் விதம் குறித்தோ எந்த யோசனையையும் முன்வைப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி உள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார். அரசியலமைப்பிற்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குதவற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு அவசியமாகும். இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நேரடியாக தாக்கம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கோப்பா எனப்படும் அரச நிதி சார் நிறைவேற்று சபையின் தலைவராக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார்கள். இந்த சபைக்கு மிகவும் பொருத்தமானவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பதவி எதிர்பார்ப்புடன் அரசாங்கத்திற்கு குறை கூறுவது பொருத்தமற்றதாகும் என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார். மக்களின் பிரச்சினைகளுக்காக அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் முன்னிற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.