அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது? சட்டத்தரணி ஸ்ரீகாந்தா கேள்வி
தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான நல்லதம்பி சிறிக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களால் மறக்க முடியாத ஜேவிபி கட்சியில், தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி வேட்பாளர் அநுர களமிறங்கி உள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை சட்டரீதியாக பிரித்தவர்கள் தமிழ் மக்களிடம் மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என கேட்கின்ற நிலையில் தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் வாக்களிக்க முடியும்?
தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்குவது தொடர்பில் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
தம்பி அநுரவிடம் நான் ஒன்றை கூறுகிறேன், இன்னும் நாட்கள் இருக்கின்றன நாளையோ நாளை மறு தினமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குங்கள் உங்களுக்கான ஆதரவு தொடர்பில் நாங்கள் சிந்திப்போம்.
தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் தேன் போன்ற வார்த்தைகளை கூறி வாக்குகளை கேட்கும் தென்னிலங்கை வேட்பாளர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
அதன் காரணமாக நீண்ட காலமாக தென்னிலங்கை வேட்பாளர்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
எமது பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை தாங்கி தென் இலங்கைக்கு சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை கூறவே களமிறங்கி உள்ளார்.
ஆகவே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வினை முன் வைக்காத எந்த ஒரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.