அபிவிருத்தியில் வலுவான பங்காளியாக இருக்குமாறு சவூதியிடம் கோரிக்கை.
இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டில் வலுவான பங்காளியாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை தொழிநுட்ப பூங்கா, ஆடை மற்றும் ஒளடத வலயங்கள் உள்ளிட்ட சுற்றுலாத்துறை போன்றவற்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகப் பூங்கா ஆகிய இடங்களில் இதற்கான வசதிகள் உள்ளன.
சவூதி அரேபிய தேசிய தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், சவூதி அரேபியா இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவையும் அமைச்சர் பாராட்டினார்.
நீர், எரிசக்தி, சுகாதாரம், வீதி, கல்வித் திட்டங்களுக்காக 1981ஆம் ஆண்டு முதல் சவூதி நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவிற்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
பெருமளவிலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு சவூதி அரேபியா செயற்பட்டுள்ளது. தற்போது, சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கு வீசா இன்றி இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த வசதி ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
சவூதி அரேபிய மக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கையில் உள்ள புராதன வரலாறு, கலாசாரம் மற்றும் இயற்கை அழகை அனுபவிக்க முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் அதன்போது தெரிவித்தார்.