அரசியல் பிரச்சினைகளை தீர்த்து, அபிவிருத்திக்கு முன்னுரிமை – ஜனாதிபதி
வடக்கின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், வடக்கு அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைகளை வலுப்படுத்தி, அதிகாரங்களை வழங்குதல் தொடர்பான கொள்கைகளை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பொருளாதார நெருக்கடியினால், இன வேறுபாடின்றி அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளும் சீர்குலைந்தன. எதிர்காலம் இல்லாத காலகட்டத்தில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தாம் ஏற்படுத்தியதாக விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன், அரசாங்கம் ஏற்படுத்திய வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம்.
சர்வதேச நாணய நிதியமும் இது குறித்து எச்சரித்துள்ளது. தற்போதுள்ள வேலைத்திட்டத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு தொடர்வதன் மூலம் எவராலும் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதிக்கும், மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பத்தரமுல்லையில் இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாத காரணத்தினால், நாட்டின் பொருளாதாரமும் அரசியல் முறைமையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதியை பலப்படுத்த கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் அதன்போது தெரிவித்தனர்.