முறையற்ற ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் ஆராய நாளை மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் அட்டனில் விசாரணை நடத்துவர் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அட்டன் கல்வி வலய ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக பல்வேறு முறை பாடுகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. இதனைக் கவனத்தில் கொண்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் நேற்று நடைபெற்ற நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது மத்திய மாகாண ஆளுநரின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு வந்தார்.
மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய அட்டன் கல்வி வளைய ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இன்று காலை மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது சரியான தகவல் சேகரிப்பின்றி, ஆசிரியர் சுற்றுநிறுபத்தை பின்பற்றாமல் அட்டன் கல்வி வலையத்தில் ஆசிரியர் இடமாற்றம் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அரசாங்க பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட மாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துவது. நுவரெலியா மாவட்டத்தில் எவ்விதமான பிரபல பாடசாலையும் இல்லாத பட்சத்தில் ஆறு வருட இடமாற்ற கொள்கையை இடைநிறுத்தி ஆசிரியர் இடமாற்றத்தை எட்டு வருடமாக்குமாறு கோரப்பட்டது.
அத்துடன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்விடங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு மத்திய மாகாண கல்வி அதிகாரிகளின் குழு ஒன்று நாளை அட்டன் கல்வி வலையத்திற்கு அனுப்பி முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க கோருவது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி நாளை 15 ஆம் திகதி இக்குழு அட்டன் கல்விக்காரியாலயத்தில் விசாரணைகளை ஆரம்பிக்கும். ஒரே நாளில் விசாரணைகள் முடிக்கப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது . அத்துடன் விசாரணையின் போது ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளும், பாடசாலை அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. எனவும் காங்கிரஸ் கல்வியில் ஒன்றிய தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
N.S