இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தானும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன மத பேதமின்றி தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் அதன் ஊழியர்களுடனான சந்திப்பில் இன்று கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். வடமாகாண ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதே நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி கடந்த ஜூன் மாதம் அந்த பிரச்சினையை தன்னால் தீர்க்க முடிந்ததாக குறிப்பிட்டார்.
எனவே, ஏனைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் தற்போது கவனம் திரும்பியுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த தாம் சந்தித்த இளைஞர்களின் முதன்மையான கோரிக்கை தொழில் வாய்ப்புகளைப் பெற்று எதிர்கால ஸ்திரத்தன்மையை உருவாக்குவதே என ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை வடக்கு தெற்கு என வகைப்படுத்த முடியாது. மாகாண சபைகளை பலப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் பரந்த இடத்தை உருவாக்குவதே நோக்கமாகும்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் மத்திய அரசாங்கம் ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.