இலங்கை புதிய பொருளாதார யுகத்தில் பிரவேசித்து வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கை புதிய பொருளாதார யுகத்தில் பிரவேசித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் தற்போதைய நிலையில் இருந்து முன்னேறும்.
கண்டி மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வர்த்தகர்களை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும். வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
ஒவ்வொரு மாகாணத்தின் பொருளாதார அதிகாரத்தையும் பரவலாக்குவதற்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட உள்ளன.
இலங்கையின் பிரதான பொருளாதார மையமாக கண்டியை உருவாக்கும் திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அடுத்த வருடம் முதல் அதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
முதல் முறையாக அரசாங்கம் தேசிய கடன்களை நிறுத்தி வைத்துள்ளது. அதற்காக புதிய வருமான வழிகளை தேட வேண்டும்.
அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக, கூட்டுத்தாபனங்களுக்கு விலைச் சூத்திரத்தின் மூலம் பணத்தை சம்பாதிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோலியத் துறையிலும், மின் துறையிலும் இந்த கட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
கடந்த மற்றும் இந்த வருட ஆரம்பத்தில் வெட்வரி அதிகரிப்பால் அனைவருக்கும் கடினமாக இருந்தது.
தற்போது பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. அதன் மூலம் முதன்மை வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிகமாக கிடைத்ததை குறிப்பிட்ட ஜனாதிபதி, இது மிகவும் நல்லதொரு நிலைமை எனவும் சுட்டிக்காட்டினார்.