எதிர்க்கட்சியின் வாக்குறுதிகளை செயற்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழச்சியடையும் – ஜனாதிபதி
எதிர்க்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்குப் பொருத்தமாக இருந்தாலும் அதனை செயற்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலமையை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் எனில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்கொண்டு செல்ல வேண்டும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில சகலரும் இணைந்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செய்வதற்கு நாடு ஓரளவு சிறந்த பொருளாதாரத்துடன் இருக்க வேண்டும். இலவசமாக பாதணிகளை வழங்குவதால் மாத்திரம் நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்ந்து விடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணலை அரசியல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை இடைநடுவே நிறுத்திக்கொண்டால், அந்த நிதியத்தின் ஒத்துழைப்பு நாட்டிற்கு கிடைக்காமல் போகும் என்பது திட்டவட்டமானதாகும்.
தாம் அதிகாரத்திற்கு வந்த முறைமை தொடர்பில் எதிர்க்கட்சி கருத்து வெளியிட்டு வருகிறது. எனினும், வீழச்சியடைந்திருந்த நாட்டை யார் மீட்டார் என்பதை முழு நாடும் அறியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் உள்ளிட்ட பேருவளை மக்களின் ஒத்துழைப்பும் ஜனாதிபதிக்கே கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவருடன் இணைய பயணிக்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.