கிழக்கிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சமூக படுகொலைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
கிழக்கிலங்கையில் கடந்த காலங்களில் இலங்கை அரச பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான சமூகப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சர்வதேசத்திடம் இந்த வேண்டுகோலை விடுப்பதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இலங்கை அரச படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 170ற்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் (செப்டெம்பர் 5) நினைவு கூறியதோடு, நீதி கோரி போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
செப்டெம்பர் 5, 1990 அன்று காணாமல் ஆக்கப்பட்ட 176 தமிழர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மலரஞ்சலி செலுத்தியும் தீபங்கள் ஏற்றியும் நினைவு கூரப்பட்டது.
நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி, அமலநாயகி அமல்ராஜ், கிழக்கிலங்கையில் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுக்கு இதுவரை நீதி விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனவும், இனியும் சர்வதேசம் பாராமுகமாக இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
“இந்த 9ஆம் திகதி ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் இந்த வேளையில், கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது. குழந்தைகளுக்கு என்ன நடந்தது. வெள்ளை வேனில் கொண்டுச் செல்லலப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டுச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது. சித்தாண்டி முருகன் கோவிலில் தஞ்சமடைந்த 137 பேருக்கு என்ன நடந்தது? சத்துருகொண்டானில் ஒரு ஊரையே கொண்டு சென்றார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது. இப்படி கிழக்கு மாகாணத்தில் தொகை தொகையாக கொண்டு செல்லப்பட்டவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள் இவர்களுக்கு அனைவருக்கும் 34 வருடங்களுக்கு பின்னரும் நீதியை தராத இலங்கை அரசாங்கம் இனியும் தரப்போவது இல்லை. ஆகவே சர்வதேசம் இனியும் பாரா முகமாக இருக்கக்கூடாது.”
வந்தாறூமூலை படுகொலை எனப்படும் குற்றச் செயல் இடம்பெற்ற போது அரசாங்கத்தில் பலம் பொருந்திய அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக தாம் மேற்கொள்ளும் நினைவேந்தல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் தாம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூறுவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அமலநாயகி அமல்ராஜ் மேலும் குறிப்பிடுகின்றார்.
“ஒவ்வொரு வருடமும் நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களும் தாய்மாரும் இணைந்து இந்த நினைவேந்தலை செய்யும்போது, நீதி வேண்டுமென குரல் கொடுக்கும்போது ஆனால் இலங்கை அரச பயங்கரவாதிகள் எங்களை அழைத்து விசாரணை செய்வதாகக் கூறி, இங்கிருந்து கொண்டுச் செல்லப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவி பொது மக்கள் 158 பேரை எல்டிடிஈ பயங்கரவாதிகளை நினைவுகூர்வதாக எங்கள் மீது அரச பயங்கரவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.”
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறூமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்கள் கொம்மாதுறை இராணுவ முகாமில் இருந்து வந்தவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய, அன்றைய தினம் காலை 9 மணியளவில் அங்கு வந்த இராணுவத்தினர், தஞ்சமடைந்திருந்த அனைவரையும் வரிசையாக நிறுத்தி, தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை, இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அன்றைய தினம் மட்டக்களப்பு சத்துருகொண்டான், பனிச்செயடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை இராணுவத்தினர் தாக்கி மேலும் பல கிராம மக்களை கடத்திச் சென்றுள்ளனர்.
கைதிகளை அழைத்துச் செல்ல கெப்டன் முனாஸ் எனப்படும் இராணுவ அதிகாரி உள்ளிட்ட குழுவினர் வந்தனர். கெப்டன் முனாஸ் என கெப்டன் ரிச்சர்ட் டயஸ் அழைக்கப்படுவதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் அருட்தந்தை ஹரி மில்லர் 1993ஆம் ஆண்டு ‘ஹிரு’ பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முதலாவது நிர்வாகத்தின் போது நியமித்த மூன்று கடத்தல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களில் ஒன்றான வடக்கு கிழக்கு ஆணைக்குழு, வந்தாறூமூலை படுகொலை தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணபிள்ளை பாலகிட்ணர் தலைமையிலான மூவரடங்கிய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களுக்கு, கெப்டன் முனாஸ், கெப்டன் பாலித மற்றும் கெப்டன் குணரத்ன ஆகியோரே பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் ஆயுதமேந்திய கும்பலை சேர்ந்த மேஜர் மஜீத் மற்றும் மேஜர் மொஹான் ஆகிய இரு தலைவர்களும் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஆணைக்குழு பதிவு செய்திருந்தது.
1990 செப்டெம்பர் 8ஆம் திகதி முகாமுக்கு வந்த அப்போதைய இராணுவத் தளபதி ஜெரி டி சில்வா, கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக, சாட்சிகள் ஆணைக்குழுவிடம் கூறியிருந்தன.
அந்த ‘குற்றவாளிகள்’ தொடர்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்திருக்கவில்லை.
எனினும், அந்தந்த ஆணைக்குழுக்களின் செயலாளராக இருந்த எம்.சி.எம். இக்பால், கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்டதாக ஆணைக்குழுவால் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேலதிக சட்ட விசாரணை நடத்தப்படக்கூடாது என உயர் அரசியல் அதிகாரம் உத்தரவிட்டதாக பின்நாட்களில் கூறியிருந்தார்.