சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது பரிசீலனை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர்
இலங்கைக்கான கடன் வசதிகள் பற்றிய மூன்றாவது பரிசீலனை ஜனாதிபதி தேர்தலை அடுத்து நடைபெறும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்த நிதியத்தின் தூதுக்குழு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் நேற்று பூர்த்தியானது. பீற்றர் புருவர் தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த மாதம் 25ஆம் திகதி இலங்கை வந்திருந்தார்கள்.
ஐ.எம்.எப் கடன் வசதிகளின் துணையுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதார, நிதிக் கொள்கைகளை அமுலாக்குவதன் முன்னேற்றம் பற்றியும் பெரும்பாக பொருளியல் போக்குகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவது சுற்றுப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.
இலங்கை அமுலாக்கிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தற்போது கிடைத்து வருவதாக பீற்றர் புருவர் தெரிவித்தார். பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதையும் உள்நாட்டு வட்டி வீதம் குறைத்துள்ளதையும் அரச வருமானம் மேம்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.