சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு.
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்காக வழங்கப்படும் வட்டிவீதத்திற்கென இரண்டு சதவீத சலுகை என்ற அடிப்படையில், மொத்தம் 10 சதவீத உயர்ந்தபட்ச வட்டிவீதம் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
தமது வங்கிக்கணக்கில் பத்து இலட்சம் வரை வைப்பிலிட்டுள்ள 60 வயதைத் தாண்டியவர் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
இரண்டு வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.
இதேவேளை, அரச துறையில் நிலவும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான முரண்பாடுகளை களையவும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அமைச்சரவை அண்மைக்காலங்களில் எடுத்து பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களினால் ஓய்வூதியம்பெறும் பல்வேறு குழுக்களுக்கு இடையில் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இவற்றை சீர்செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இது பற்றிக் கருத்து வெளியிட்டார்.