Home » சிறுவர் போசாக்கின்மை புள்ளிவிபர அறிக்கைகள் – நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை

சிறுவர் போசாக்கின்மை புள்ளிவிபர அறிக்கைகள் – நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை

Source

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரசு நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மையான போசாக்கின்மை நிலைமை புலப்படுவதில்லை என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, சிறுவர் போசாக்கின்மை தொடர்பிலான உண்மையான தகவல்களை வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் மூலம் சிறுவர் போசாக்கின்மையை ஒழிப்பது தொடர்பான பொதுவான பிரேரணையொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அதிகாரிகளுக்குக் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், இலங்கையில் போசாக்கின்மை போன்று அதி போசாக்கு நிலைமை தொடர்பான உண்மையான தகவல்களின் தேவையையும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாடளாவிய ரீதியில் திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படுவதில்லை என்றும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே திரிபோஷ வழங்கப்படுவதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 06 மாதங்கள் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ வழங்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவித்த நிறுவன அதிகாரிகள், அந்த வயதினருக்கான திரிபோஷ உற்பத்தியில் உரிய அளவுகோல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக திரிபோஷ தயாரிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சுகாதார அமைச்சினால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டதன் பின்னர், அந்த வயதினருக்கும் திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், விநியோகிக்கப்படும் திரிபோஷா, கஷ்டப் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய மக்களுக்கு சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கமைய, போசாக்குத் தேவையுடைய பிள்ளைகளை உரிய முறையில் இனங்கண்டு, தேவையுடைய பிள்ளைகளுக்கு திரிபோஷா விநியோகிக்கப்படுவது தொடர்பில் மேற்பார்வை செய்யப்படவேண்டும் எனத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பெருந்தோட்டத்துடன் தொடர்புடைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. மேலும், தோட்டங்களின் சில பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் (MOH) மூடப்படுவதால், தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தலைவர் சுட்டிக்காட்டினார். குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒருவர் தோட்டத்திலுள்ள சுமார் 3000 குடும்பங்களை மேற்பார்வை செய்யவேண்டியுள்ளதால், நடைமுறை ரீதியாக எழும் சிரமங்கள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்நாட்டில் தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 80% பேர் பெண்கள் எனவும், அவர்கள் காலை வேலைகளுக்குச் சென்ற பின்னரே பெரும்பாலும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் அந்தந்த வீடுகளுக்கு வருவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். அதனால், அவர்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகள் கிடைக்காமல் போகும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, அந்த நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வாக, அதிகபட்சமாக 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்ப சுகாதார சேவை அதிகாரியை ஏற்பாடு செய்வதன் மூலம் பயனுள்ள சேவையைப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்தோட்டங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மன உளைச்சல், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்று அதிகாரிகளிடம் குழு சுட்டிக்காட்டியது.

இந்த நாட்டில் சிறுவர் போசாக்கின்மை சரியான உணவு கிடைக்காமை காரணமாக மாத்திரம் ஏற்பட்டுள்ள நிலைமை மட்டுமல்லாது, தவறான உணவுப் பழக்கங்களும் அதற்குக் காரணமாக இருப்பதாக குழுவில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்பொழுது முன்பள்ளிச் சிறுவர்களுக்கு போசாக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் 60 ரூபாவை அதிகரிக்க முடிந்தால் வழங்கப்படும் போசாக்கு உணவை மேலும் மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பெருந்தோட்டங்களுக்குத் தனியான துணை ஊட்டச்சத்தை தயாரித்துள்ளதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு பிரதேசங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் அமுல்படுத்துவதுடன் அவை அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சிறுவர்களின் போசாக்கின்மையை தடுக்கும் வகையில், பல அரச நிறுவனங்கள் அதிகளவு பணம் செலவழித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய குழு, தேவையான ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒரு அரசு நிறுவனம் மூலம் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஜகத் சமரவிக்ரம, உபுல் கலப்பத்தி மற்றும் குழுவின் தலைவரின் அனுமதியதுடன் சுஜித் சஞ்சய பெரேரா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image