கொழும்பு துறைமுக நகரில் இருந்து கடத்தப்பட்டு, பின்னர் இரத்தினபுரி மாவட்டம் ஏஹெலியகொட கரந்தன காட்டுப் பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சீனப் பிரஜை ஹாவோ பொன் (Hao Pon), சர்வதேச இணைய குற்ற வலையமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பெரும் செல்வந்தராகவும் இருந்தவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இணையக் குற்றங்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோடிக் கணக்கான பணத்தை மையமாகக் கொண்ட கடுமையான தகராறே இந்தக் கொலைக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகளின்படி, இந்தக் கொலையில் சுமார் 20 சீனப் பிரஜைகள் தொடர்புபட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவ நாளில், நண்பர்களாக நடித்த இரு சீனர்கள், இவரை கொழும்பு துறைமுக நகரில் உள்ள பாலம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திட்டமிட்ட வகையில் செயல்பட்ட மற்றொரு குழுவினர் அவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஏஹெலியகொட கரந்தன பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் உடலம் கற்களால் மூடப்பட்டு மறைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை நடந்த மறுநாளில், கரந்தன பகுதியில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், கற்களுக்கு இடையில் வெளிப்பட்டிருந்த மனிதக் கையை கவனித்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அது காணாமல் போன சீனப் பிரஜையின் உடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இது வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்புடைய வேறு நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வெளிநாட்டு பயணத் தடையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவும், ஏஹெலியகொட பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விரைவான, நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணையின்போது குற்றச்சாட்டுடன் தொடர்பில்லாத சீனப் பிரஜைகள் எவரும் அநியாயமாகப் பாதிக்கப்படவோ தொந்தரவு செய்யப்படவோ கூடாது என்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கோரியுள்ளது.
The post சீனர் படுகொலையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்! appeared first on LNW Tamil.