சோமாலியாவில் விபத்துக்குள்ளான இலங்கை உலங்குவானூர்தி ; பாதுகாப்பு அமைகு அளித்துள்ள விளக்கம்
சோமாலியாவில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதையடுத்து, அல்-ஷபாப் பயங்கரவாதக் குழுவினால் இலங்கையர்கள் குழுவொன்று பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
நேற்று (12) மத்திய ஆபிரிக்க குடியரசில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியின் போது சரக்கு விமான கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் MI17 உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது.
தரையிறங்கும் போது தூசி நிறைந்த வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்தின் போது, 05 பணியாளர்கள் உலங்குவானூர்தியில் இருந்துள்ளதுடன் 1,200 கிலோ எடையுள்ள சரக்குகளும் காணப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான உலங்குவானூர்தி மற்றும் ஊழியர்கள் அனைவரும் தற்போது மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள இலங்கை அமைதிப்படை தளத்தில் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விபத்தின் பின்னர் அவர்களை ஒரு குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அந்த செய்திகளை முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.