ஜப்பான் இலங்கைக்கு துணை நின்றதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
இலங்கை இக்கட்டான நிலைமையை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜப்பான் அரசாங்கம் உதவி செய்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று பரவிய சமயத்திலும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்திலும் அவற்றிலிருந்து மீண்டெழ ஜப்பான் வழங்கிய உதவிகளை அமைச்சர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தமது பதவிக் காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதக்கி அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நோக்கத்துடன் நேற்று கொழும்பில் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜப்பான் தூதுவர், இலங்கையின் அபிவிருத்திக்கும் கடன் மறுசீரமைப்பு முதலான முயற்சிகளுக்கும் உதவி வழங்கி முடிந்தமை குறித்து உளமார்ந்த மகிழ்ச்சி அடைவதாக ஜப்பான் தூதுவர் குறிப்பிட்டார்.
நேற்றைய நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும் உரையாற்றினார். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றார்கள்.