டொலரின் பெறுமதியை 275 ரூபாவாக குறைப்பதே இலக்கு.
டொலரின் பெறுமதியை 275 ரூபாவாகக் குறைப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பால், வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அடுத்த ஆண்டு முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எட்டப்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தை சீர்குலைக்க தாம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். பேருவலயில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யோசனைகள் அமுல்படுத்தப்பட்டால், 2022ஆம் ஆண்டு மே மாதத்தை விட கடினமான சூழ்நிலை உருவாகி, டொலருக்கு 500 ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரூபாவின் பெறுமதியை பாதுகாக்கும் திட்டத்தை முன்வைக்குமாறு தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார்.
வறுமையை ஒழிக்கும் நோக்கில் வலுவான வேலைத்திட்டம் இரண்டு வருடங்களுக்குள் அமுல்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டார்.
எந்தவொரு அரசியல் அழுத்தமும் இன்றி, பொலிஸாரால் செயற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சகலரும் தமது கடமைகளை கௌரவமாக செய்யக்கூடிய நாட்டை உருவாக்குவதே தமது ஒரே நோக்கம் என குறிப்பிட்டார்.
நாட்டிற்கு பொருந்தாத எந்தவொரு சட்டமூலத்தையும் நிறைவேற்றப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
தாம் மிருகவதைக்கு எதிரானவன் எனவும், கலாசார, சமயக் கூறுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி – செங்கடகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்து சமய பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய விவசாயம் போன்றவை பாதுகாக்கப்படும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.