Home » “தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாவதில் எந்த மாற்றமும் இல்லை” ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது

“தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாவதில் எந்த மாற்றமும் இல்லை” ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது

Source

“தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாவதில் எந்த மாற்றமும் இல்லை” ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதம் முதல் அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மாத்திரம் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 3,000 குற்றச்சாட்டுக்களை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் தொடரும் துஷ்பிரயோகங்கள் குறித்த இந்த விவரங்கள் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையரின் சமீபத்தைய விரிவான அறிக்கையில் வெளியாகியுள்ளது.

“பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை மற்றும் மோசமாக நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்து இடம்பெறுகிறது ” என செப்டெம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத் தொடருக்கான அறிக்கை தெரிவிக்கின்றது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் வோகர் டர்க் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “நாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிப்பதில் தொலைநோக்கு பார்வையில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சில கவலையான போக்குள் காணப்படுகின்றன,” என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின்  வடக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமக்கு அளித்த தகவல்களின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அந்த அறிக்கை கூறுகிறது.

”கடந்த ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலப்பகுதியில் சித்திரவதை குறித்த 2,845 முறைப்பாடுகளும், இழிவாக நடத்தப்படுவது குறித்து 675 குற்றச்சாட்டுகளும் தமக்குக் கிடைத்ததாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியது ” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஜனவரி 2023 மற்றும் மார்ச் 2024க்கு இடையில், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான 21 வழக்குகள், தடுப்புக் காவலிலிருந்த போது 26 பேர் உயிரிழந்த வழக்குகள் மற்றும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக 1,342 முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச தரப்பிலிருந்து தடுப்புக் காவலில் 2023இல் 14 பேரும் 2024இல் மூவரும் உயிரிழந்தனர் எனவும், மேலும் தடுப்புக் காவல் மற்றும் சுட்டுக்கொல்லப்படுவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் 2747/2023 இலக்கமிடப்பட்டு பொலிசாரால் விடுக்கப்பட்ட அறிக்கையும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.”

”அண்மையில் பிரதானமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், இலங்கை பாதுகாப்பு படையினரால் தமிழர்கள் கடத்தப்படுவது, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படுவது, மோசமாக நடத்தப்படுவது மற்றும் பாலியல் வன்செயல்களுக்கு ஆளாக்கப்படுவது ஆகிய அண்மைய குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தோம். இவை ஜனவரி 2024 முதல் கிடைத்தவை” என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூறுகிறது. அரசியல் எதிரிகள், நியாயத்திற்காகப் போராடுபவர்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரே பிரதான இலக்காக இருந்துள்ளனர் என்பதை பலதரப்பிலிருந்து உறுதியாகியுள்ளதைக் காட்டும் ‘தெளிவான ஒரு பாணி வெளியாகியுள்ளது’ என அந்த அறிக்கை கூறுகிறது.

”தமிழர்கள், பிரதானமாகக் காணாமல் போனோர், காணி/சுற்றுச்சூழல் உரிமைகள் அல்லது போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என நம்பப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டனர் அல்லது புகைப்படம் எடுக்கப்பட்டனர், பின்னர் பொலிஸின் குற்றத் தடுப்பு பிரிவினர் அல்லது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என தங்களை வாய்மொழியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்களால் கைது செய்யப்பட்டார்கள்.”

அந்த வகையில், கண்கள் கட்டப்பட்டு அடையாளம் தெரியாத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் மூன்று தொடக்கம் ஐந்து நாட்கள் வரை விசாரிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற, அல்லது இழிவான முறையில் நடத்தப்படுவதற்கு பல்வகையான உத்திகளைக் கையாண்டதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“விசாரணையின் போது அல்லது தடுத்து வைக்கப்பட்டபோதோ தாங்கள் பாலியல் துஷ்பிரயோகம், விதைப்பைகளை அழுத்துவது, பலவந்தமாக நிர்வாணமாக்குவது, மார்பகங்களைக் கடிப்பது போன்ற பாலியல் சித்திரவதைகளை அனுபவித்ததாக பலர் கூறினர். அதுமாத்திரமன்றி அப்படியான சித்திரவதை அனுபவிப்பதை நிறுத்துவதற்காக, தகவல்களைப் புனைந்து சொல்வது அல்லது ‘ஒப்புக்கொள்வது’, அல்லது அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்க இயலாத சிங்கள மொழியில் உள்ள ஆவணங்கள் அல்லது வெற்றுத்தாள்களில் கையொப்பமிடச் செய்வது ஆகியவற்றைச் செய்யும் நிலை ஏற்பட்டது எனவும் சிலர் கூறினர்.”

“அவ்வகையில் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் காரணமாகத் தவறிழைத்தவர்களின் பைகள் நிரம்பின. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடினர். போர் முடிந்த பின்னர் தொடர்ச்சியாக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஆகியவையும் அதைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத சூழலும் தொடர்கின்றன.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

”இறுதியாக குடும்ப உறுப்பினர் ஒருவர் இடைத்தரகர் மூலம் பாதுகாப்பு படையில் இருக்கும் யாராவது ஒருவருக்கு .லஞ்சம் கொடுத்த பிறகு அவர்கள் இறுதியாக விடுவிக்கப்பட்டனர் என செவ்வி காணப்பட்ட பெரும்பாலானவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறினர்.”

எனினும், அரசாங்கமோ இந்த குற்றச்சாட்டுகளில் போதிய தகவல்கள் இல்லை என பதிலளித்ததாகவும், கடத்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படுவது மற்றும் சித்திரவதை ஆகியவை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனத்திற்கொள்வதாகவும், விசாரணைகள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கூறியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை இலங்கை அரசு “தன்னிச்சையான கைதுகள், சட்டவிரோத கொலைகள், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன, என்பதையும் மேலும் அவை தீவிரமாக விசாரிக்கப்படு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமின்றி இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் பொலிசாருக்கு வெளிப்படையாக அறிவுறுத்தி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image