தமிழ் அரசு கட்சியின் புதிய தலைமைக்கு சந்திரகாந்தன் விடுத்துள்ள கோரிக்கை
மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசு கட்சியின் தலைமைத் தேர்வு முடிவுகள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நீண்ட நெடிய அரசியல் வரலாற்றினை கொண்ட எம் சமூகத்தின் பழம் பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம் வெற்றுக் கோச சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிருவாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன்.
மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் அடிமட்ட சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தங்கள் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.