தமிழ் மக்கள் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர்
சில தமிழ் மக்கள் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாதாந்த கேள்வி பதிலிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.
கேள்வி :- தேசம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
பதில் – நல்லதொரு கேள்வி!
தேசம் என்பது தே – (இடம்) மற்றும் சம் – (தொகை) என்ற இரு சொற்களின் சேர்க்கையாகும். தே + எம் (எங்கள் நிலம்) என்றும் தேசம் என்ற சொல் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் ஒரே மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இனக்குழுக்கள் வாழும் தாய் நிலப் பகுதியை தேசம் என்பார்கள்.
ஆனால் நாடு என்பது நிர்வாகத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் இந்தியா போன்ற பல தேசங்களை உள்ளடக்கிய நாடுகளும் உண்டு. ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இனக்குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாகப் பிரிந்தும் காணப்படுகின்றன. (கொரிய மொழி பேசும் தேசமானது தற்போது வடகொரியா, தென் கொரியா என்று பிரிந்து காணப்படுகின்றன.
பொதுவாக ஒரு குறித்த நிலப்பரப்பில் மொழி,மரபு, இனக்குழு, குடிவழக்கங்கள் போன்றவை ஒருங்கே அமையப்பெற்றால் அது தேசம் எனப்படும். சங்க இலக்கியங்களில் மொழியை வைத்தே தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது. (“வட வேங்கடம் தென்குமரி அவ் இடை தமிழ் கூறும் நல்லுலகு” எனப்பட்டது) அதாவது வேங்கடத்திற்கு வடக்கில் வேற்றுமொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர்தேசம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இலங்கையில் இரு மொழி பேசுவோர் இருக்கின்றார்கள். சரித்திரப்படி மற்றும் DNA பரீட்சை முடிவுகளின் படி அவர்கள் ஒரு இன மக்களே. ஒரு இனத்தவர் இரு மொழி பேசி வருகின்றார்கள். இதுவரை காலமும் சிங்கள மொழி பேசியோர் ஆரியர் என்றும் தமிழ் மொழி பேசியோர் திராவிடர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது அவ்வாறான கருத்துக்கள் தவறென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஆரியர் என்போர் தொல் (proto) இந்திய – ஐரோப்பிய வழிவந்த ஒரு இனத்தவர் என்ற கருத்து வெளிவந்திருந்தது. ஆனால் “ஆரியன்” என்ற சொல் உயர்குடிப் பிறந்த ஒருவனை குறிப்பிட்டதே தவிர ஆரியர் என்று ஒரு இனம் இருக்கவில்லை என்று தற்போது கருதப்படுகின்றது. அத்துடன் உயர்குடிப் பிறந்த ஒருவன் என்ற கருத்து தொல் இந்திய ஐரோப்பிய மொழி பேசியவர்களை உயர்ந்த மனித இனத்தவர்கள் என்ற ஒரு பிழையான கருத்தை வெளிநிறுத்த வைத்தது.
அதனால்த்தான் ஹிட்லர் தாம் ஆரியர் என்றும் மற்றைய இனங்கள் குறைந்த இனத்தவர்கள் என்றும் அடையாளம் காட்டி யூதர்களை சித்திரவதைக்கும் படுகொலைக்கும் உள்ளாக்கினார். அத்துடன் ஆரியர் வெள்ளையர்கள் என்று அடையாளம் காட்டி கறுப்பின மக்களை ஹிட்லர் போன்றவர்கள் தாழ்த்திப் பேசி வந்தார்கள். இன ரீதியாக கறுப்பின மக்கள் தாழ்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் தொல் இந்திய ஐரோப்பிய மொழி பேசியவர்கள் தம்மை பிறிதொரு இனமாக அடையாளப்படுத்தவில்லை என்பதை வரலாற்றாசிரியர்கள் தற்போது உணர்த்தியுள்ளார்கள்.
வேத காலத்தில் ஆரியர் என்ற சொல் கலாசாரம், சமயம் மற்றும் மொழி சார்ந்த சொல்லாகப் பாவிக்கப்பட்டதே ஒளிய இனம் சார்ந்த ஒரு சொல்லாக எங்கணும் பாவிக்கப்படவில்லை என்றும் எடுத்துக் கூறியுள்ளார்கள். வேத காலத்தவர் தமக்குள் வேத வழி நின்றவர்களை ஆரியர்கள் என்று அடையாளம் காட்டினார்களே தவிர ஆரியர் ஒரு இனத்தவர் என்று எங்குமே கூறவில்லை என்பது எடுத்துரைக்கப்பட்டது.
உண்மையறியாத ஐரோப்பிய சரித்திரவியலாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிக்கலே ஆரியர் ஒரு இனத்தவர் என்று அடையளப்படுத்தப்பட்டமை. ஆகவே சிங்களவரை ஆரியர் என்று அடையாளப்படுத்தியமை தவறு என்று தற்போது சரித்திராசிரியர்களாலும் மொழி வல்லுநர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மொழி இலங்கை பூராகவும் பேசப்பட்டு வந்தது. பௌத்தம் வந்த பின் தமிழ் பௌத்தர்கள் உருவாகினர். (பேராசிரியர் சுனில் ஆரியரத்னவின் தெமலபௌத்தயா என்ற சிங்கள நூலைப் பார்க்கவும்.
காலம் செல்லச் செல்லத் தமிழ் பௌத்தர்கள் பாளி மொழியை தமது தமிழுடன் சேர்த்து பாவிக்கத்தலைப்பட்டனர். இன்று சென்னையில் தமிழுடன் ஆங்கிலம் வெகுவாகக் கலந்து பேசப்படுகின்றது. வெகு விரைவில் “தமிலிஷ்” என்ற ஒரு புதியமொழி உருவாக இடமிருக்கின்றது. அவ்வாறு தமிழுடன் பாளிமொழி கலந்து பேசி வந்தவர்கள் கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய மொழிக்கு இடமளித்தார்கள். அது தான் சிங்கள மொழி.
இலங்கையில் காலங்காலமாக வேற்று இனங்கள் இருக்கவில்லை. ஒரே இனத்தவர்தான் இரு மொழிகளைப் பேசினர். எனவே ஆதி இலங்கையர்கள் தமிழ் மொழி பேசியோர் சிங்களமொழி பேசியோர் என்று பிரிந்து, அது காலக் கிரமத்தில் 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரவியலாளர்கள், மொழியியலாளர்கள் செய்த தவறால் இன ரீதியாகப் பிரிந்து நிற்க வேண்டி வந்தது.தமிழரும் சிங்களவரும் இன ரீதியாக ஒரே இனத்தவர். ஆனால் அவர்கள் மொழி வழியாகப் பிரிந்து நிற்பவர்கள். தெற்கு ஏழு மாகாணங்களில் ஆதி இலங்கையர் பாளி சேர்ந்த தமிழைப் பேசிவந்ததால் சிங்களவர் என்றழைக்கப்பட்டனர். வட கிழக்கில் தமிழ் மொழியை ஆதி இலங்கையர் தொடர்ந்து பேசி வந்ததால் அவர்கள் தமிழர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டார்கள்.
இவ்வாறான மொழி வழி வந்த இடமே வடகிழக்குத் தமிழ்ப் பேசும் இடங்கள். அது தமிழ் மொழி பேசுவோரின் தாய் இடங்களான தமிழ்த் தேசம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள மொழி பேசுவோர் தமிழ் மொழி பேசுவோரை வேற்றுமைப்படுத்தி, பாகுபாடு காட்டி, சொல்லொண்ணாத் துயரங்களையும் துன்பத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். தமிழ் மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள மொழியைத் திணிக்கும் வண்ணம் “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டு வந்தார்கள்.
இதனால் தமிழர்கள் தமது நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியிருந்தது. அதனால் தமிழ்த் தேசியம் பிறந்தது. 1833 இல் ஆங்கிலேயர் நாட்டை ஒன்றாக்கியவுடன் தமிழ்த்தேசியம், சிங்களத்தேசியம் போன்ற கருத்துக்கள் மறைந்து போயிருந்தன. முழு நாட்டையும் ஆங்கில மொழியால் இணைத்து இரு மொழி பேசுவோரையும் தாம் இருவரும் ஒரு தேசம் என்று அவர்களை எண்ண வைத்தனர்.
ஆனால் சிங்களமொழி பேசுவோர் தமது மொழியைத் திணித்து தமிழ்ப் பேசும் மக்களை அழிக்கவும் தமிழ் மொழி பேசுவோர் நிலங்களைச் சூறையாடவுந் தொடங்கிய போதுதான் தமிழ்த் தேசியம் எம் மக்களிடையே பெரும் வலுவுடன் வெளிவந்தது. சில தமிழ் மக்கட் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரு சிங்கள நாடு. அதில் தமிழராகிய நாம் சிங்களவரிடம் இருந்து பறிக்கக் கூடியதைப் பறிப்போம் என்ற சிந்தனையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழ்த் தேசியத்தை மறுப்பவர்கள். தமிழ் தேசத்தையும் அதன் வழிவந்த தமிழ் தேசியத்தையும் ஏற்பவர்கள்தான் தமிழ்த் தேசியவாதிகள் என தெரிவித்தார்.