கனடா – ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞன் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தாரின் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் உயிரை மாய்க்கும் எண்ணத்தில் இருந்ததாக தாக்குதலுக்கு இலக்காகி உயிர் பிழைத்த குடும்பத்தின் தந்தை பிரதேச பௌத்த விகாரையின் தலைவர் மற்றும் அவரது மற்றுமொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார்.
மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக கூறியுள்ளார்.