தான் தலைமைத்துவம் வழங்குவது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கே ஒழிய அரசியலுக்காக அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடு மிஞ்சப்போவதில்லை. நாட்டை இழந்து அரசியல் அமைப்பைப் பாதுகாக்க முடியாது. அரசியல் அமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகின்றது. தேர்தலை நடத்துவது தொடர்பான தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவில்லை. அரசாங்கம் தேர்தலைப் பிற்போடவில்லை. பிற்போடுவதற்குத் தேர்தல் இல்லையென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலமை மற்றும் நிதியின்மை காரணமாக தேர்தலை நடத்துவது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்பதால் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரம் வரை குறைத்து, தேர்தலை நடத்துமாறு கடந்த டிசெம்பர் 14ஆம் திகதி தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தற்போது தற்காலிக தேர்தல்கள் ஆணைக்குழுவே இயங்கி வருகின்றது. அது பாராளுமன்றத்திற்கே அன்றி வேறு எவருக்கும் பொறுப்புக் கூறவேண்டியதில்லை. அதனால் இதனை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாட வேண்டும். அவ்வாறான ஒன்று இதுவரை இடம்பெறவில்லை. இது தவறான செயற்பாடாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.