ஊழலும், மோசடியும் தலைவிரித்தாடும் நாட்டில் இரத்தம் ஏற்றுவதற்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் கூட மருந்துகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வங்குரோத்தடைந்துள்ள இந்நாட்டில் மருந்துகள் கூட திருடப்படும் அளவுக்கு ஊழல் உச்சம் ஏறும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் போலியான முறையில், போலி நிறுவனம் ஒன்றின் ஊடாக போலியான புற்றுநோய் மருந்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், இம்மருந்தினால் குணமாகக்கூடிய புற்று நோயாளிகள் கூட நிச்சயம் இறப்பார்கள் என்றும், இதுபோன்ற குற்றச் செயல்களைச் செய்து பணம் சம்பாதிக்கும் சுரண்டல் பேராசை அரசியலை ஒழிக்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என்றும், பாடசாலை கல்விக் கட்டமைப்பு, சுகாதார கட்டமைப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் அது ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தகைய டிஜிட்டல் மயமாக்கலை நடைமுறைப்படுத்த, ஆங்கில மொழி, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை நன்கு கற்ற சிறார்கள் தலைமுறையே நாட்டுக்கு தேவை என்றும், இவ்வாறானதொரு சந்ததியை பலப்படுத்தும் நோக்கிலே பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் 35 ஆவது கட்டத்தின் கீழ் மாத்தறை/ ரதம்பல சுமங்கல மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
திருட்டு, இலஞ்சம், ஊழல்,மோசடி என்பவற்றால் பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது வளங்களை அழித்தல் ஆகியனவே இந்நாட்டின் அழிவுக்கு முக்கியக் காரணங்கள் என்றும், இந்த திருட்டை தடுக்க வேண்டுமானால் டிஜிட்டல் மயமாக்கல் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் வரிச் சுமையால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதுடன் புத்திஜீவுகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நாட்டில் அரச வருவாயையும், வரி அறவீட்டையும் டிஜிட்டல் மயமாக்க முயலும்போதும் வேலை நிறுத்தங்கள் நடப்பதாகவும், உள் நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம்,கலால் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து பொருளாதார மையங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் திருட்டு, மோசடி ஒழிக்கப்பட்டு பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மை என்பன முன்னிலைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
போருக்குப் பிறகு,ஏனைய நாடுகள் முன்னேறினாலும் நமது நாடு எதிர்மறையான நிலைக்குச் சென்றதாகவும், எனவே, சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி எங்கே தவறு செய்தோம் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும், சரி, தவறை நிதானமாகப் புரிந்து கொண்டு ஒரு நாடாக ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குழந்தைகளை ஆங்கிலம் கற்கச் சொன்னால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினர் சிரிக்கிறார்கள் என்றும், தங்களுக்கு வாக்களிக்கும் குடிமக்களை என்றுமே அறியாதவர்களாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம் என்றும், அறிவினாலே கிராமத்தையும், நகரத்தையும், நாட்டையும் வெல்லலாம் என்றும், எனவே அந்த அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரே நோக்கம் அறிவை மையமாகக் கொண்ட சர்வதேச அளவிலான கல்வியை வழங்கும் பாடசாலை கட்டமைப்பை உருவாக்குவதே என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.