Home » திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

Source

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா?

சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் காவல்துறையினர் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை அப்புறப்படுத்திய நடவடிக்கையைக் கண்டித்ததுடன், உடனே அதனை அங்கே நிறுவிட வேண்டுமென கொக்கரித்துள்ளனர். அதனையடுத்து மீண்டும் அதேசிலையை அதே இடத்தில் நிறுவியுள்ளனர். இடதுசாரி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களென காட்டிக் கொள்ளும் ஜேவிபி அரசு , வழக்கமான ‘சிங்கள பேரினவாத அரசு’ தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. இந்த அடாவடி ஆதிக்கப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழர்களின் தாயகமான ஈழமண்ணில் கலாச்சார படையெடுப்பை நடத்தும் ஒரு வடிவமாக ஆங்காங்கே கவுதம புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்மண்ணை சிங்களமயப் படுத்துவதையும் பௌத்த மயப்படுத்துவதையும் ஒரு செயல்திட்டமாக வரையறுத்துத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வலதுசாரிகள் மட்டுமின்றி இடதுசாரிகளும் அதனைத் தொடரும் நிலை உள்ளது. இதன்மூலம், அதிபர் அநுர திசநாயகவும் கடந்தகால அதிபர்களைப் போலவே இலங்கை தீவைச் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியதாக நம்புகிறார் என அறியமுடிகிறது. இதற்கு அவர்களின் அரசமைப்புச் சட்டம்தான் வழிவகுக்கிறது.

சிங்கள – பௌத்த -பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டதாகவும், தமிழினத்தை ஒடுக்குவதற்கான பேரினவாதக் கூறுகளைக் கொண்டதாகவும் அரசமைப்புச் சட்டம் இருப்பதே இதற்கு காரணமாகும்.

அதிபர் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அரசு விரைவில் புதியதொரு அரசமைப்புச் சட்டத்தை யாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்நிலையில், தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சிநிர்வாகத்தில் ‘கூட்டாட்சி’ (சமஷ்டி) நிர்வாக முறையை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஏற்கனவே, தமிழர்களின் தரப்பாக நின்று இந்திய ஒன்றிய அரசு, ‘இந்திய -இலங்கை ஒப்பந்தந்தை’ ஏற்படுத்திய வரலாறு உள்ளது. இன்னும் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திட வேண்டுமென சிங்கள ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டிய ‘தார்மீகப் பொறுப்பு’ இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அந்த வகையில், புதிய அரசியல் யாப்பில் தமிழ்த் தேசிய இனத்துக்கான முழுமுற்றான ‘தன்னாட்சி அதிகாரத்தை’ வழங்குவதற்குரிய வாய்ப்பை உருவாக்கிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழ் மக்கள் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் மக்களின் ஒரு சாரார் கடந்த காலங்களில் பௌத்த மதத்தைச் சார்ந்தும் வாழ்ந்தார்கள். தமிழில் உள்ள மணிமேகலை, குண்டலகேசி போன்ற காப்பியங்கள் இதற்கான சான்றுகள் ஆகும். ஆனால், கௌதம புத்தரின் போதனைகளுக்கு எதிராக, பௌத்த தம்மத்துக்கு முற்றிலும் விரோதமாக, கௌதம புத்தரையே இழிவுபடுத்துவதுபோன்று தமிழர்களை ஆக்கிரமிக்கும் ஒரு கருவியாக பௌத்தத்தைப் பயன்படுத்துவதையே தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

அண்மையில், நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது ஈழத்தின் களநிலையை என்னால் உணர முடிந்தது. யுத்தத்தின்போது நேரடியாகவே இனவழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்கள், இப்போதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது.

எனவே, புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய ‘சமஷ்டியை’ உறுதி செய்வதே இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் அவர்களை விடுதலை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.

The post திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image