Home » தென்பகுதி ஆழ்கடலில் 150 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு – 5 மீனவர்கள் கைது!

தென்பகுதி ஆழ்கடலில் 150 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு – 5 மீனவர்கள் கைது!

Source

இலங்கை கடற்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, தென்பகுதி ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து 150 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (05) காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் டிக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதிலிருந்த 10 பொதிகளில் காணப்பட்ட போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் டிக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றிருந்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் 100 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 50 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினும் அடங்குவதாகத் தெரிவித்தார்.

குறித்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சரியான அளவை கடற்படையினர் தற்போது கணக்கிட்டு வருகின்றனர்.

விசேட கடற்படை நடவடிக்கையின்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகு, இலங்கைக்குத் தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களும் இன்று காலை டிக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

2025ஆம் ஆண்டில் கடற்படையினர் மாத்திரம் 75 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், ‘நாடு ஒன்றிணைந்து’ வேலைத்திட்டத்தின் கீழ் 109 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையின் நடவடிக்கைகள் மூலம் 69 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது இதுவரை 314,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,050 பேர் முக்கிய போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடற்படையினரால் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 63 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் 11 பலநாள் மீன்பிடிப் படகுகளும் அடங்குகின்றன.

இதற்கிடையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post தென்பகுதி ஆழ்கடலில் 150 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு – 5 மீனவர்கள் கைது! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both