தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு நன்கு தயாராகுங்கள். ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியை மகத்தானதாக மாற்றுவதற்காக நாட்டுக்காக உழைக்கக் கூடிய அணியொன்றை தெரிவு செய்வதற்கு மக்கள் செயற்படுவார்கள் என தமது அரசாங்கம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கல்வியை முன்னுரிமைப் பணியாகக் கருதுகிறது. தற்போது கல்வியின் மீதான நம்பிக்கை அழிந்து வருகிறது.
அது மீண்டும் கட்டியெழுப்பட வேண்டும். சிறுவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலை செல்ல வேண்டும், பெற்றோருக்குச் சுமையாக இருக்கக் கூடாது.
ஆசிரியர்களுக்கும் தமது தொழிலை மகிழ்ச்சியாகவும் திறமையாகவும் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.