தேர்தலில் வாக்கு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் குறித்து விளக்கம்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
வாக்காளரை அடையாளம் காணும் வகையில், ஏதாவது எழுதப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும்.
எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்குகள் குறிக்கப்படாத சந்தர்ப்பங்களிலும், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் குறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம், ஏனைய இரண்டு வேட்பாளர்களுக்கு 2வது மற்றும் 3வது விருப்பு வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
முதலாவது வாக்கை குறிப்பிடாமல், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புவாக்குகளை விட அதிகமான வாக்குகளை வழங்கப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும். வாக்காளர் விரும்பினால் ஒரு வாக்கை மட்டுமே அளிக்க முடியும்.
வாக்குச்சீட்டில் 2வது மற்றும் 3வது விருப்பத்தேர்வுகள் குறிக்கப்படாவிட்டாலும், ஒரு வேட்பாளருக்கு உரிய வாக்குகள் பதிவாகியிருந்தால் அது செல்லுபடியாகும்.
விருப்பு வாக்குகளை நீங்கள் குறிக்கவில்லை என்றால், நீங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் அடையாளத்திற்கு முன்னால் உள்ள இடத்தில் புள்ளடியை சரியாகக் குறிப்பிட்டு வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.