தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்குஇ தோட்டக் நிறுவனங்கள் இணக்கம் – ஜனாதிபதி
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு, ஏழு தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையைக் கூட்டி, அது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய சட்டங்களை இயற்றுவது அவசியமானால், அதற்கும் தயார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கண்டியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பல வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த ஊழியர் சேமலாப நிதி அடுத்த வருடம் முதல் வழங்கப்பட உள்ளது. நாட்டு மக்கள் கடந்த இரண்டு வருடங்களில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறேனும் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாக குறிப்பிட்டார். இருப்பினும், பொருளாதார சிக்கல் முழுமையாக தீர்க்கப்படவில்லை. ஆனால், மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டை விட தற்போது மக்களின் வாழ்க்கைச் சுமை குறைந்துள்ளாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால், இந்த நிலை சாத்தியமானது. நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்துள்ளது. அதன்படி, பெற்ற கடனை அடைக்க 2042ஆம் ஆண்டு வரை கால அவகாசம் உள்ளது. இந்த ஒப்பந்தங்களில் இருந்து விலகினால் அதற்கான சலுகைகள் கிடைக்காது. குறித்த ஒப்பந்தங்களை திருத்தவும் முடியாது. இதுபோன்ற ஆபத்தான செயல்களை செய்வதன் மூலம், நாடு மீண்டும் வீழ்ச்சி அடையக்கூடும் என்பதுடன், மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் ஏற்படக்கூடும் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்த வருடம் கண்டி மாவட்ட தோட்ட உட்கட்டமைப்புக்கு மாத்திரம் 160 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை அந்த மாவட்டத்திற்கு அந்தளவு நிதி ஒதுக்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக சம்பள உயர்வு அவசியமாகும். தற்போதைய ஜனாதிபதி சம்பள பிரச்சினையை தீர்க்கவும், மலையக அபிவிருத்திக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.