நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு மக்களைச் சாரும் – ஜனாதிபதி
பிராந்திய ஊடகவியலாளர்களின் நெருக்கடிகளை சட்டரீதியாக தீர்ப்பதற்கான நிலை ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் சமர்ப்பிப்பதற்கான ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட இருக்கின்றது. ஆணைக்குழுவிற்கான அதிகாரங்கள் பற்றி புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். பிராந்திய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நோக்கோடு, நாடு பூராகவும் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக பொறுப்பு வாய்ந்த கட்சிகளின் ஒத்துழைப்போடு புதிய அரசியல் முறைமை ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்றும், நாட்டை முன்னெடுத்துச் செல்வது பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.