Home » நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை

Source

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் (Krrish) மற்றும் ஏர்பஸ் (Airbus) வழக்குகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கிரிஷ் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக இந்தியாவிலிருந்து கிடைத்த பணம் சட்டவிரோதமான பணம் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும், இந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இதன்படி, கிரிஷ் வழக்கில் ஒக்டோபர் 6ஆம் திகதி வரையும், ஏர்பஸ் வழக்கில் ஒக்டோபர் 13ஆம் திகதி வரையும் நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்குகள் தொடர்பாக எதிர்காலத்தில் சட்டமா அதிபரால் ஒரே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிரிஷ் வழக்கில், கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை Krrish Transworks Colombo (Pvt) Ltd நிறுவனத்திற்கு விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், நாமல் ராஜபக்ஷ ரூ.70 மில்லியன் தொகையை இலஞ்சமாக பெற்றதாக இலஞ்ச ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பணம் நாமல் ராஜபக்ஷவின் அறிவு மற்றும் ஒப்புதலுடன் செயற்பட்டதாகக் கூறப்படும் நிமல் பெரேரா என்பவர் ஊடாக பெறப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது. மேலும், பணம் கிடைத்ததா என்பதையும் நாமல் ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு கூறியது.

இந்தப் பரிவர்த்தனை தொடர்பான கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக, இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைத்த MLA அறிவிப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இருப்பதாகவும், அதில் கிரிஷ் கட்டிடத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் சட்டவிரோதமான பணம் என இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான காலப்பகுதியில் இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக பசில் ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி வகித்ததாகவும், அக்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருந்ததாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும், ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 149ஆவது பிரிவின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறும் ஆணைக்குழு கோரியது.

இதற்கு எதிராக நாமல் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, குறித்த வழக்கில் பழைய இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 149ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ் சட்டரீதியாக செல்லுபடியாகாது என வாதிட்டார்.

மேலும், நாமல் ராஜபக்ஷ இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படுவதற்கு முன்னரே குறித்த சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனினும், பிணை கோரிக்கையை ஒக்டோபர் 6ஆம் திகதி வழக்கு விசாரணையின்போது வாய்மொழியாகவும் எழுத்துமூலமாகவும் முன்வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார்.

இதன்படி, கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் ஒக்டோபர் 6ஆம் திகதி வரையும், ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் ஒக்டோபர் 13ஆம் திகதி வரையும் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both