பத்து போக்குவரத்து சங்கங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட பத்து போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் அந்த சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உட்பட பஸ் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு இதில் கலந்து கொண்டனர். எரிபொருளின்றி தாம் எதிர்கொண்ட பிரச்சினைகளை மறக்கவில்லை எனவும், மீண்டும் அவ்வாறானதொரு யுகம் அவசியம் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி ஆற்றிய பணியை பஸ் சங்கப் பிரதிநிதிகள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். பஸ் போக்குவரத்து துறை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் போக்குவரத்து துறைக்கு பாரிய பொறுப்பு உள்ளது என ஜனாதிபதி குறிப்பி;ட்டார். இலங்கையில் போக்குவரத்து துறையின் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த உள்ளக போக்குவரத்து முறையொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, போக்குவரத்து துறை தொடர்பான நிறுவனங்களின் தற்போதைய கட்டமைப்பு மாற்றப்படும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தம்மால் எழுதப்பட்ட நூலை ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.