பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இது நாளை காலை 8.30 வரை அமுலில் இருக்கும். அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது,
இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். இதனால், அந்த கடற் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் கடல் அலைகள் 2 மீற்றர் தொடக்கம் 5.3 மீற்றர் வரை உயரக்கூடும்.
ஆனால், கரைக்கு வரும்போது, அலைகளின் உயரம் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால், கடல்சார் சமூகத்தினர் மறுஅறிவித்தல் வரை அந்த கடற்பகுதிகளில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை, பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, களனி கங்கை, களுகங்கை, கிங் கங்கை, அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள சில தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் பாரிய அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை நாளை காலை வரை அமுலில் இருக்கும்.
அதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகலை, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவெல் ஓயாவை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளம் குறித்து அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்துடன், சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக, 26 ஆயிரத்து 729 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஐயாயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. 295 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன. இதுவரை 50 பராமரிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து 96 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 78 பேர் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.