ந.லோகதயாளன்.
பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை என்பது இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்ல, முழு இந்தியப் பெருங்கடல் பகுதியின் நலனுக்காகவும் உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம் என பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா பயணமாகியுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுடனான சந்திப்பின் நிறைவில் இலங்கை ஜனாதிபதி
ரணிலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். ஜனாதிபதி ரணில் தனது கருத்தை வெளிப்படுத்தியத்தைத் தொடர்ந்து பாரதப் பிரதமர் தனது கருத்தை வெளியிட்டார் இதன்போது,
தமிழர்கள் மீதான தனது கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நாம் நம்புகிறோம்.
சமத்துவம், நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது முக்கியம். 13வது திருத்தத்தை இலங்கை அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடாத்தி தமிழர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கும் என நம்புகிறோம். 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இருதரப்பு உறவுகளுக்கும் முக்கியமான ஆண்டாகும். மேலும், இந்த ஆண்டு மலையகத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் ஆகின்றன. மலையகத் தமிழர்களுக்காக 75 கோடி ரூபாயில் (இந்திய நாணயம்) பல்வேறு திட்டங்களை அறிவிப்பதுடன் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை என்பது இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்ல, முழு இந்தியப் பெருங்கடல் பகுதியின் நலனுக்காகவும் உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம் என்றார்.