பாராளுமன்றில் சுயாதீனமானார் அருந்திக பெர்னாண்டோ
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
“.. இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அரச அதிகாரிகளின் மூளைகள் முற்றாகக் கழுவப்பட்டுள்ளன. அரச ஊழியர்களிடம் பொய் வாக்குறுதிகளை நிரப்பியுள்ளனர்.
இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமைதான். வடக்கிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லவிருந்த போது அங்கு பெரும் இளைஞர் படுகொலைகள் இடம்பெற்றன.
இப்போது இலக்கு இளைஞர்கள். சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர். இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான்.
ஆனால், தோல்வியடைந்த பின்னர் மீண்டும் போராடச் சொன்னால், பாராளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று பேசினால், நான் இன்றிலிருந்து சுயேட்சை உறுப்பினராக மாறி அவர்களை தோற்கடிக்கக்கூடிய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொள்வேன்..” என்றார்.