ந.லோகதயாளன்.
பணத்தை சுருட்டிவிட்டு களவு போனதாக நாடகமாடிய இரு சீனர்களும் அவர்களிற்கு உதவிய இரு இலங்கையர்களும் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச மட்ட பிரமிட் வகை மோசடிகளில் ஈடுபட்டு பல கோடி ரூபா பணத்தை இரண்டு சீன பிரஜைகள் ஈட்டியுள்ளனர். அவ்வாறு ஈட்டிய பணம் களவாடப்பட்டதாக காண்பிக்கவே களவு நாடகமாடியுள்ளனர் சினர்கள் என்பது பொலிசாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இரு சினர்களின் மோசடிக்கு உதவிய இரண்டு இலங்கையர்களையும் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சீனர்களும் இலங்கை நாட்டில் பிரமிட் மோசடி மூலம் சுமார் 4 கோடி ரூபாவிற்கும் மேல் சீனப் பிரஜைகள் மோசடி செய்துள்ளதாக தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் 7 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் பொரளையில் பெறப்பட்ட வீடொன்றில் வசித்து வந்த சீன பிரஜை ஒருவர் , தனது வீடு சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடந்த 19ஆம் திகதி பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
வேன், 7 மடிக்கணினிகள் மற்றும் 170 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு களவுபோனதாக கூறப்பட்ட வீட்டின் அருகில் இருந்த ஓர் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் இந்த களவு பதிவாகியிருந்தமையே சினர்களின் நாடகத்தை அம்பலமாக்கியது.
கொள்ளையிடப்பட்டதாக கூறிய பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதன்படி, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பொலிஸார் தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்தபோது மூன்று இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிந்தனர்.
இந்த மூவரில் இரண்டு இலங்கையர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது கைதான இலங்கையர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கைதானவர்களில் ஒருவர் களவு முறைப்பாடு வழங்கிய சீன பிரஜையின் சாரதியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இதனால் சந்தேகம்கொண்ட பொலசார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில்
சீன நாட்டுப் பிரஜையே 15 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்து கொள்ளையடிப்பது போல் நடிக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டு பொலிசில் முறைப்பாடு வழங்கியமை கண்டறியப்பட்டது.
இவற்றினை விசாரணையின் இறுதியில் கைதான இலங்கையர்கள் இருவரும் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் அந்த சீன பிரஜையும் அவரது மற்றொரு சீன நண்பரையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொழும்பு துறைமுக நகரத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக கூறி மறைமுகமாக இவர்கள் இருவரும் நாட்டில் பாரியளவில் பிரமிட் மோசடியினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான பணத்தினை சூதாட்ட விளையாட்டுக்கு சென்று தோற்றுள்ள நிலையில், அதனை மறைப்பதற்காகவே இவ்வாறான போலியான கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கமைய சட்ட நடவடிக்கை மேறகொள்ளப்படவுள்ளது.