பொதுச் செயலாளர் பதவியால் தமிழரசு கட்சிக்குள் திடீர் குழப்பம்
புதிய இணைப்பு
இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பான முக்கியபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுச் சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை தமிழரசுக் கட்சியின் உப தலைவராக வடமாகாண சபை அவைத்தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான சீ.வீ.கே சிவஞானத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், போட்டியில்லாமல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்திலேயே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்றும், மாற்று வேட்பாளர் இருக்கும் பட்சத்தில் தேர்தல், வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றும் குகதாசன் நேற்றிரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பரபரப்பாகும் தமிழ் அரசியல் களம்! திடீரென கூட்டப்பட்ட அவசர கூட்டம் (முதலாம் இணைப்பு)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடீரென இன்று மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய குழுக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு நேற்றிரவு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைப் பதவி
கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது. இதில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளை பெற்று, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேவேளை, கட்சியின் தலைமைப் பதவியைப் சிறீதரன் தேசிய மாநாட்டில் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய குழு உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நேற்று இரவு அழைப்பு விடுக்கப்பட்டு இந்தக் கூட்டம் கூட்டப்படுகின்றமை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.