பொருளாதார நெருக்கடியின் போது தப்பிச் சென்றவர்கள் இன்று வீரர்களாக மாறியுள்ளார்கள்
உரத்தின் விலை குறைக்கப்படும் என்றும் விவசாயக்கடன் ரத்து செய்யப்படும் என்றும் சிலர் இன்று கூறினாலும், உரம் இன்றி மக்கள் நெருக்கடியை சந்தித்தபோது, அவர்கள் எங்கிருந்தார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம் உலகத் தலைவர்களோடு கலந்துரையாடி தேவையான உரத்தை பெற்றுக் கொண்டமையினால், விவசாயிகளை உடனடியாக வலுவூட்ட முடிந்ததாகவும் அவர் கூறினார். நாட்டு மக்கள் நெருக்கடிகளை சந்தித்தபோது தப்பிச் சென்றவர்கள் இன்று அதிகாரத்தை கோருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார். முஸ்லிம் மக்களின் பிரதான வருமானவழி வர்த்தகமும், விவசாயமும் ஆகும்.
இந்த இரண்டு துறைகளிலும் வீழ்ச்சி ஏற்படுமாயின், மக்களுக்கு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். தாம் இனத்தையோ, மதத்தையோ அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
பிரபலம் அற்ற தீர்மானங்களை எடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். ரூபாவின் பெறுமதியை அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியைக் கண்டு தப்பியோடியவர்கள் இன்று வீரர்களாக மாறியுள்ளார்கள். அவர்கள் நாட்டை பொறுப்பேற்கத் தவறியமையினால், நாட்டின் தலைமைத்துவத்தை தாம் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு போகங்களிலும் பாரிய அளவிலான விளைச்சல் கிடைத்திருக்கிறது. விவசாயிகளுக்கே இதன் நன்மைகள் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் பதவியையேனும் சரியான முறையில் முன்னெடுக்கத் தவறியவர்களுக்கு எவ்வாறு ஜனாதிபதி போன்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்க முடியும் என நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.