பொருளாதார மீட்பு: ஜனாதிபதியின் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தால் பாராட்டப்பட்டுள்ளது.
நாட்டிற்கு விஜயம் செய்துள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, எந்தவித தடையும் இன்றி மூன்றாம் மீளாய்வை நிறைவு செய்வதற்கும் நான்காவது தவணையை தாமதமின்றி பெற்றுக் கொள்வதற்கும் தேவையான வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
நான்காவது தவணை விடுவிப்பு தாமதமானால்இ நாட்டின் பொருளாதாரத்தில் சில பாதகமான தாக்கங்கள் ஏற்படலாம். கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 290 கோடி அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் முதலாவது தவணைக்கான அனுமதிஇ கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிடைத்தது. இரண்டாம் தவணை டிசெம்பர் மாதத்திலும் கடந்த ஜூலை மாதம் மூன்றாவது தவணையும் கிடைத்தது. சர்வதேச நாணய நிதியிலிருந்து இலங்கைக்கு இதுவரை 100 கோடி அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அதற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான வெற்றிகரமான உடன்பாட்டை எட்டுவதற்கு இலங்கையினால் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.