மக்கள் சார்பு அரச சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
வினைத்திறனான மக்கள் சார்பு அரச சேவையை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச ஊழியர்களுக்காக தாம் என்றும் முன்னிற்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
பிரஜைகளுக்காக பணியாற்றும் அரச ஊழியர்கள் எதிர்நோக்கிய அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாய, காணி, கால்நடை வளங்கள், நெடுஞ்சாலைகள், கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக தமது கடமைகளை இன்று ஆரம்பித்ததன் பின்னர் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். கிராமிய மட்டத்தில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விரிவான பொறுப்பு விவசாய அமைச்சுக்கு காணப்படுகிறது.
அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே, கிராமிய மட்டத்தில் நிலவும் வறுமையை ஒழிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
மரபு ரீதியான அரசியல் கலாசாரத்தின் மீதான எதிர்ப்பு, பொருளாதார நெருக்கடி, அரச சேவையின் வினைத்திறன் பற்றி எழுந்துள்ள திருப்தியற்ற நிலை என்பன இதற்கான காரணங்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் ஊழல் மோசடி என்பன இருந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
இதனைத் தடுப்பதற்காகவே மக்கள் தமக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். இதற்கமைய, அரச ஊழியர்கள் தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும்.
அரச துறையில் நிலவிய அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், பதவி உயர்வு வழங்காமை என்பன புதிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற மாட்டாது.
மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்க அரச ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். எதிர்வரும் 40 நாட்கள் நிலைமாற்றத்திற்குரிய காலப்பகுதியாகும்.
இந்தக் காலப்பகுதியில் அரச சேவை சீர்குலையாத வகையில் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச ஊழியர்களை சாரும். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், அமைச்சுப் பொறுப்புக்கள் உரிய அமைச்சுக்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
முன்பிருந்த தலைவர்கள் ஊடகங்களுக்கு முன் அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்பட மாட்டாது. இவ்வாறான சம்பவங்களின் மூலம் தாம் அரச ஊழியர்களை பழிவாங்கப் போவதில்லை என்றும், அரச ஊழியர்களின் கௌரவத்தை பாதுகாக்க தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.