மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையும்.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை இன்று தொடக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில இடங்களில் 50 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்யலாம். இன்று இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்கத்தினால் சீரற்ற காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகிறது.
இதனால் இந்தப் பிரதேசங்களுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை வரை செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களிடமும், கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.