முட்டையை சதோச ஊடாக விற்பனை செய்ய யோசனை
நாட்டின் தேவைக்கு ஏற்ற வகையில் முட்டையை உற்பத்தி செய்வதற்கு தற்சமயம் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
முட்டை அதிகளவில் இருப்பதால் நுகர்வும் அதிகரித்துள்ளது. முட்டை விலை குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கோழிப்பண்ணைக்கே சென்று முட்டைகளைக் கொள்வனவு செய்கின்றனர். தற்சமயம் உற்பத்தியாளர்களின் முட்டைகள் சந்தைக்கு வருவது தீர்ந்துவிட்டது.
இந்த நிலையில் நாளாந்த உற்பத்திகளே சந்தைக்கு வருகின்றன. இதனால் முட்டையின் கேள்வி அதிகரித்துள்ளது. அதனால் விலையிலும் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது முட்டைகளை சதோச ஊடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் இடைக்கிடையே ஏற்படும் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
தற்போது காணப்படும் மூலப்பொருட்களின் விலைக்கு அமைய முட்டையின் விலை மாறுபடுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ.நிஸாந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோழித் தீனிக்கான செலவினைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் முட்டையின் விலையை 30 ரூபா வரையில் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் 28 ரூபாவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்சமயம் சற்று அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.