Home » முன்னாள் போராளிகளில் மேலும் பலரை விடுவிக்க நடவடிக்கை என்கிறார் ரணில்

முன்னாள் போராளிகளில் மேலும் பலரை விடுவிக்க நடவடிக்கை என்கிறார் ரணில்

Source

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளார் எனவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்க கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்கள் பொறுமை காக்கும் வேளையில், எதிர்க்கட்சியினர் அதிகாரத்தை மட்டுமே குறியாக வைத்து தேர்தல் கோரி போராட்டம் நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

மன்னார் பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று செவாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரமே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று உடன்படிக்கைகளை மீறி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.  

நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் அதேவேளை, மன்னாரின் அபிவிருத்திக்காக அரசு முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு எடுத்துரைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

”சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்வதா அல்லது வரிசை யுகத்திற்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் எனது எதிர்காலமன்றி உங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். செப்டெம்பர்  21 ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும். உங்கள் திருமண தினத்தின் பின்னர் முக்கியமான நாள் இது.

இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ முன்வந்தார்களா? அவர்கள் எங்கிருந்தனர்? பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் பின்வாங்கினார்கள். இன்று நாட்டில் அனைத்தும் இருக்கின்றன. பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கஷ்டப்படும்போது வராமல் இப்போது தேர்தலுக்காக உங்களிடம் வந்திருக்கும் சஜித்தையும், அநுரவையும் தும்புத்தடியால் ஓட ஓட அடித்துத் துரத்த வேண்டும். வாயில் இருந்து உமிழ்நீர் வடிய வந்து தங்களுக்கு ஆணை தாருங்கள் என்று இருவரும் வெட்கமில்லாமல் கேட்கின்றார்கள்.

வரியைக் குறைப்பது ஐ.எம்.எப். நிபந்தனைக்கு முரணானது. சஜித்தும், அநுரவும் சொல்வதைப் போல தற்போதைய நிலையில் வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். நெருக்கடி ஏற்படும்.

இப்பகுதியில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவது குறித்து காதர் மஸ்தானுடன் கலந்துரையாடியுள்ளோம். அதனை நவீனமயப்படுத்துவோம். அவர் பெரிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார்.அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குவேன்.

மேலும், இந்தப் பகுதியை சூரிய சக்தி மையமாக மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். தெளிவான திட்டத்துடன் மக்களிடம் வந்திருக்கின்றேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களுக்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் பலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மன்னாரில் உள்ள சிங்களக் கிராமங்களில்  வாழும் மக்கள் அஞ்சத் தேவையில்லை.

மன்னார் பிரதேசம்  அபிவிருத்தி செய்யப்பட்டு, மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு புதிய பாதை அமைக்கப்படும். இப்பிரதேசத்தை நாம் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

காஸ் சிலிண்டருக்குச் செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களித்து  ஆரம்பித்துள்ள பணியைத் தொடர மக்கள் ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image