முறையான பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும்
மக்கள் எதிர்நோக்கிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் தப்பிச்சென்ற சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் நாட்டை முன்னெடுத்துச் செல்ல தகுதியானவர்களா என்பது பற்றி மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் மக்களுக்கான உரத்தை வழங்கியதாகவும் அவர் கூறினார். நான்கு போகங்களையும் வெற்றிகரமான முறையில் மேற்கொண்டு, நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஏறாவூர் பிரசேத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி உரையாற்றினார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விடயங்கள் பற்றியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது கருத்து வெளியிட்டார். விரும்புவோருக்கு தமது உடலை நல்லடக்கம் செய்யவும், பூதவுடலை தகனம் செய்வதற்கும் ஏற்ற வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. விரும்பியோருக்கு தமது உடலை மருத்துவ பீடங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் அளவில் சமர்ப்பிக்கத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.