யாழ்ப்பாணம் எதிர்வரும் பத்து வருடங்களில் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாறும் -ஜனாதிபதி
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் தமது வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடமாகாண மக்கள் சார்பில் இந்த முழுமையான ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் கிடைக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார். நாட்டை கட்டியெழுப்பும் தமது முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை ‘யாழ் நதி’ திட்டத்தின் ஊடாக பலப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. காங்கேசன்துறை – துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. சீமெந்து தொழிற்சாலை இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும். இந்த வலயம் பூநகரியிலும் அமைக்கப்படும்.
பலாலியை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும். எதிர்வரும் பத்து வருடங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும்.
இத்தகைய பொருளாதார வெற்றியை எதிர்கொள்ள, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்பு தமக்கு கிடைக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை ஏற்று, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஜனாதிபதி இன்று விஜயம் செய்தார்.
இதன்போது, அக்கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மகத்தான வரவேற்பை அளித்தார்கள்.