“ராஜபக்சக்களிடம் பல்லாயிரக்கணக்கான டொலர்கள்” – கூட்டமைப்பு எம்.பி. பகீர் தகவல்
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்த நபர்களுக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கைமீது சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அந்த நடவடிக்கை அமைய வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கூறுகின்றார். இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றம் என்ன செய்யபோகின்றது? அந்நபர்களுக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசு மற்றும் நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை சர்வதேசம் ஏற்கும் வகையில் அமைய வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் பலர் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். எனவே, ராஜபக்ச குடும்பம் வசம் உள்ள பல்லாயிரக்கணக்கான டொலர்களை பெற்று, வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.