லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
யுத்த சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு 32 இலங்கையர்கள் பாதுகாப்பு கோரி வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தூதரகம் வழங்கி வருகிறது. லெபனானில் உள்ள இலங்கையர்களுடன் தூதரகம் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
யுத்த சூழ்நிலையால் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்ரேலுக்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட காரணத்தினால், டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.