வடமாகாணத்தில் முதல் முறையாக ஐந்துஆசனங்களை கைப்பற்றிய தேசிய கட்சி
பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளதுடன், 5 ஆசனங்களையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
பிரதான தேசியக் கட்சியொன்று பொதுத் தேர்தலில் வடமாகாணத்தை வெற்றிக்கொண்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது முதல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெற்று வந்தது. 2001ஆம் ஆண்டுக்கு முன்னரும் வடக்கை மையப்படுத்தி இயங்கிய தமிழ் கட்சிகளே யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களை கைப்பற்றியிருந்தன.
ஆனால், முதல் முறையாக ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களை வெற்றிகொண்டு புதிய வரலாற்றை படைத்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 3 ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் 2 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு பிரதான தேசிய கட்சிகள் வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் ஆசனங்களை கைப்பற்றியிருந்த போதிலும் யாழ். மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தை முழுவையாக வெற்றிக்கொள்ளவில்லை.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஆதரிக்கும் வேட்பாளர்களது கட்சிகளே வழமையாக வடக்கில் வெற்றிபெற்றுள்ளன. இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சில கட்சிகள் வழங்கிய ஆதரவின் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியே இந்த இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் வெற்றிகொண்டிருந்தது.
வடக்கு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு காரணமாகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளதாக வடக்கின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 63,377 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், சுயேட்சைக்குழு 17 27,855 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
வன்னி தேர்தல் மதவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 29,711 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,102 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியானது பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.