வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அங்கீகாரம்.
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நீக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களின் கீழ் இந்தத் தடை தளர்த்தப்படவிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, அந்நியச் செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பொருட்கள் மீதான வரையறை படிப்படியாக தளர்த்தப்பட்டதோடு தற்சமயம் வாகன இறக்குமதிகள் மீது மாத்திரமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நீக்கப்பட உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பொது பொருட்களை எடுத்துச் செல்லும் வாகன இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படவிருக்கின்றன.
தனிப்பட்ட வாகனங்கள் உட்பட ஏனைய சகல வாகன இறக்குமதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் முற்றாகத் தளர்த்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.