வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 84 சதவீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கோடியே 45 லட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினமும் அவற்றை பெற்றுக் கொள்ளாதவர்கள், எதிர்வரும் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை அருகில் உள்ள தபால் நிலையத்தில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி, பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எமது நிலையத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் ரசிக பீரிஸ், தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்குச் சென்று தனது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் நகலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கட்டாயம் இல்லை. எனினும், வாக்காளர் ஒருவர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, வாக்களிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வாக்களிப்பதற்குத் தேவையான அடையாள உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.
தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மதகுருமார்கள் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, கிராம சேவையாளரின் கோரிக்கையின் பேரில்;, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை போன்றவற்றை தேர்தல் மத்திய நிலையங்களில் சமர்ப்பிக்கலாம்.
ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் போது எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாவிட்டால், இரண்டாவது விருப்பு வாக்கை எண்ண வேண்டியிருக்கும் என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர் மத்தியில் மாத்திரமே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து வாக்குச்சீட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது. அவை தற்போது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாவட்ட செயலகங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வாக்களிப்பு மத்திய நிலையங்களின் தலைவர்களிடம் வாக்குச் சீட்டுகளை ஒப்படைப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் கடமையாற்றும் சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட சகல பதவிகளுக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.