வீட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுத்தால் கூட்டமைப்பு வலுப்பெறும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் என தெரிவித்த புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம் என்றார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டு மூன்று பிளவாக உடைந்து இருக்கிறது என்றும் அவர்கள் ஒற்றுமையாகிய பின்னரே கூட்டமைப்பு ஒற்றுமை பற்றி பார்க்கலாம் என்றார்.
கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் இன்னும் பதவியேற்கவில்லை. அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சிகள் இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவை மற்றொரு குழு எதிர்க்கும். ஆகவே தமிழ் அரசுக் கட்சி ஒற்றுமையாக வேண்டும். அதன் பின்னரே ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை பற்றி பார்க்கலாம்.
கடந்த காலத்தில் சம்பந்தனின் தலைமையின் கீழ் நாம் இணைந்திருந்தாலும் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்பட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். இதனால் சிலர் கூட்டமைப்பை விட்டுச் சென்றனர்.
இப்போது கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும்.
பொதுவான சின்னம் இருக்கலாம். அது வீடாகவும் இருக்கலாம். தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம்.
இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டாலே கூட்டமைப்பு அர்த்தபுஷ்டியானதாக இருக்கும்.
நான் மட்டுமல்ல ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். என்றார்.