இந்த ஆண்டு இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடை
2024ஆம் ஆண்டு சிறுபோக நெல் அறுவடைக்கான முன்னறிவிப்பு அறிக்கையை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய, உரிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 40 லட்சம் ஹெக்டெயர் வயல்களில் நெல் அறுவடை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டெயர் வயலில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது செய்கைக்கான இலக்கில், 88 சதவீதம் முன்னேற்றமாகும். அதன்படி, சிறுபோகத்தில் இரண்டு மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்கும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த கால பெரும்போகத்தில் கிடைக்கப் பெற்ற நெல்லின் மூலம், இந்த வருட நுகர்வுக்குத் தேவையான அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முறை சிறுபோகத்தில் 61 ஆயிரம் ஹெக்டெயர் கீரி சம்பா பயிரிடப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தையில் கீரி சம்பாவை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.